Copy
நம் நாடு (கோலாலம்பூர்) 12-08-2012: பகுதி 3
Sri Valli-Teyvanai Samedha Murugan

உடலில் ஊசி குத்தாமல்
முருகனை வழிபட வேண்டும்

(கோலாலம்பூர் 12-08-2012) கடந்த மூன்று நாட்களாக மலாயா பல்கலைக் கழகத்தில் முருக பக்தி மாநாடு நடைபெற்று வருகிறது. பெட்டாலிங் ஜெயா, திருவாக்கு திருப்பீடம் -மலாய் பல்கலைக் கழகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. பல நாடுகளில் இருந்து 700 பேராரர்கள்  மாநாட்டில் கலந்து கொண்டார்கள். முருக பக்தி மாநாடு குறித்து அவர்களில் சிலரைக் கேட்டபோது  இப்படி கருத்துரைத்தார்கள்.

Muruga Bhakti conference speakers
டாக்டர் சாரதா நம்பி ஆரோரன்
நான்  தமிழ்நாடு மயிலாப்பூரில் இருந்து வந்துள்ளேன். எனக்கு இந்த மாநாடு உணர்ச்சிப் பூர்வமாக மிகப் பெரிய அனுபவத்தைத் தந்துள்ளது. மலேசியர்களைப் பார்த்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. அனைத்தையும் நவீனமாகவும், சரியான நேரத்தின்படியும் நடத்துகிறார்கள். 30 ஆண்டுகளாக தமிழக அரசின் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணி  புரிந்து வருகிறேன். திருச்செந்தூர் முருகன் எங்கள் குலதெய்வமாக இருப்பதினால் கடந்த 40 ஆண்டுகளாக மேடையில் முருகனைக் குறித்துப் பேசி வந்துள்ளேன். இன்றைய மாநாட்டிலும் தமிழ் இசைப்பாடல்களில் முருகன் என்ற தலைப்பில் கட்டுரைப் படித்தேன் என்கிறார் டாக்டர் சாரதா.

முத்து இருளாயி
இல்லறத்தில் இருந்து விலகி கடந்த 40 ஆண்டுகளாக துறவறம் பூண்டு தவசி மலையில் தவம் செய்து வருகிறேன். இந்த மாநாட்டில் கலந்து கொண்டதால் தமிழ் கடவுளாம் முருகனைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்து கொண்டேன். மாநாட்டில் முருகன் குறித்தக் கட்டுரை படிக்கப்பட்டபோது முருகனே வந்து நேரில் பேசுவது போன்ற அனுபவத்தை அடைந்தேன் ' என்கிறார் மதுரையை சேர்ந்த முத்து இருளாயி.

வேதரத்தினம்
''முருகன் சாதாரணமாக கையில் வேல் ஏந்தி இருப்பார். முருகன் வில் ஏந்தி உள்ளதைக் குறித்த ஆய்வுக் கட்டுரை படைக்குள்ளேன் . 'குருமுருகன் முழு மயிலே கொணர்த்தி உன் இறைவனே'  என்ற  எனது நூலும் மாநாட்டில் வெளியீடு காண்கிறது. தமிழ்க்  கொண்டாடப்படும் இடத்தில் எல்லாம் முருகன் இருக்கிறார்.  வில்லேந்திய முருகனையும் பக்தர்கள் தெரிந்து கொள்வது சிறப்பு'' என்கிறார் தமிழகம் வேதாரண்யம் பகுதியில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்ட வேதரத்தினம்.

ஹரிசந்திரன்
இந்த மாநாட்டில் கலந்து கொண்டது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். முருக வழிபாட்டு குறித்து தெளிவாக புரிந்து கொண்டேன். படைக்கப்பட்ட கட்டுரைகள் இறைவன் யார் என்பதை எனக்கு உணர்த்தின. வழிபாட்டில் யார் முக்கியம் என்பதை தெரிந்து கொண்டேன். இறைவன் கொடுத்த உடலைப் பாதுகாக்க வேண்டும். தைப்பூசத்தில் பால்குடம், காவடி எடுக்கலாம், திருப்புகழ் பாடலாம். உடலில் ஊசி குத்தி ரத்தம் வழிய காவடி எடுப்பது முருக பக்திக்கு எதிரானது என்பதை அறிந்தேன் என்கிறார் காஜாங்கை சேர்ந்த ஹரிசந்திரன்
Muruga Bhakti conference speakers
முனைவர் ரத்தினம்
''அழகான பசுமையான நாடு. கருத்துக்கள் நிறைந்த முருக பக்தி மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டில் எல்லோரும் பொறுமைக் காத்து ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். தமிழ்க் கடவுள் முருகன் குறித்து  'முருகும் முருகனும்'  என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்கிறேன். எனது பல சந்தேகங்களை இந்த மாநாடு தீர்த்துள்ளது'' என்கிறார் இலங்கையில் பிறந்து, வளர்ந்து தற்போது லண்டனில் வசிக்கும் இரத்தினம் நித்தியானந்தன்.

கிருஷ்ணசுவாமி
புராணங்கள் வழியாக முருகனை அறிந்தேன்.  நிறைய நூல் படித்து முருக பக்தியை வளர்த்துக் கொண்டு ஆய்வும் செய்தேன். சிவனே முருகனின் அவதாரம் என்பதையும் அறிந்து தெளிந்தேன். மாநாட்டில் கலந்து கொண்டதின் வழி 12 திருமுறைகள் பற்றி தெரிந்து கொண்டேன். கந்த புராணத்திலும் 12 திருமுறைகள் உண்டு என்று இன்று அறிந்து கொண்டேன் என்கிறார் ஸ்தாப்பாக் ரமண மகரிஷி ஞான ஆலயத்தை சேர்ந்த கிருஷ்ணசுவாமி .

பேராசிரியர் கிருஷ்ணவேணி
''தமிழ் இலக்கியங்களில் முருக வழிபாடு,  திருமுருகாற்றுப்படை என்ற தலைப்பில் கட்டுரைப் படைக்கிறேன். இலங்கை ஜாப்னா பல்கலைக் கழகத்தில் 'கலை வரலாறும் அழகியலும்' என்ற தலைப்பில் போதித்து வருகிறேன். இந்த மாநாடு முருக பக்தியை தூண்டி எழுப்பும் மாநாடாக அமைந்துள்ளது. முருக பக்தி குறித்து ஆய்வுகளையும் நான் மேற்கொண்டு வருவதினால் இந்த மாநாடு பல வகைகளில் நன்மை பயக்கும் வகையில் அமைந்திருக்கிறது'' என்கிறார் பேராசிரியர் கிருஷ்ணவேணி.

டாக்டர் சரஸ்வதி
வடா ஆப்ரிக்காவில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்ட டாக்டர் சரஸ்வதி இப்படிக் கூறுகிறார் '' என் வாழ்வில் மறக்க முடியாத மாநாடாக இது அமைந்துள்ளது. எதையும் நேரத்துடன் முறையாக செய்கிறார்கள்.  வாசிக்கப்பட்ட கட்டுரைகள் முருக பக்தியை இன்னும் ஆழமாக தெரிந்து கொள்ள பெரிதும் உதவியது.  இங்கு நடைப்பெற்ற கலை, கலாச்சார நிகழ்வுகளும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. எனது முதுகலைப் பட்டப் படிப்பிற்காக 'காவடி' என்ற தலைப்பில் ஆய்வு நூல் செய்துள்ளேன். பல்கலைக்  கழகத்தில் கந்தன் முருகன் குறித்து வகுப்புக்கள் நடத்துகிறேன்''.

Transcribed by: சாந்திப்பிரியா

பகுதி 1 | பகுதி 2

 
 
Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp