Copy
2012-08-13 தமிழ் நேசன்: முருக பக்தி மாநாடு--2
Murugan Bhakti newsletter

சமய மாநாடுகளில் இளையோர்
பங்கேற்பது அவசியம் ஆகும்

டத்தோ தெய்வீகன் வலியுறுத்து

கோலாலம்பூர் ஆகஸ் 13: அனைத்துலக முருக பக்தி மாநாட்டின் 3 னாவது நாளான கடந்த சனிக்கிழமை சிலாகூர் போலிஸ் படை துணைத்தலைவர் டத்தோ ஆ. தெய்வீகன் வருகை தந்து அவர் தம் தலைமையில் இரண்டு சொற்பொழிவு நடந்தது. அதில் உரையாற்றிய டத்தோ அவர்கள் குற்றச் செயலினால் சீரழிந்து வரும் நம் இளைஞர்கள் இது போன்ற நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனால் நல்ல விழிப்புணர்வு கிடைக்கும். அதுமட்டுமன்றி சமய நெறியில் உள்ள இளைஞர்கள் சமையல் செய்ய எப்படி பக்குவம் தேவைப்படுகிறதோ அதுபோல வாழ்க்கையில் முன்னேற நல்லது எது தீயது எது எனும் பக்குவம் தானாகவே சமய நெறி அவர்களுக்கு கற்றுத் தரும் என்றார். டத்தோவின் தலைமையில் சைவ சித்தாந்தத்தில் முருகப் பெருமான் எனும் தலைப்பில் திருவாடுதுறை ஆதீனப் புலவர் சிவஸ்ரீ குஞ்சிதபாதம் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்.

அவர் தம் வரையில் மனிதர்கள் பட்ட கஷ்டத்தை தீர்க்கவே அருட்பெறும் ஜ்யோதி வடிவில் உதித்தார் முருகப்பெருமான். சைவ சித்தாந்தத்தின் தத்துவக் கொள்கையினால் நம் வாழ்வின் அர்த்தம் விளங்கும், எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறந்த முடிவுகளை எடுக்க கைகொடுக்கிறது சைவ சித்தாந்தம் என்றார்.

அவரைத் தொடர்ந்து 'இசைப்பாடல்களில் இன் தமிழ் முருகன்' எனும் தலைப்பில் திருமதி சாரதா நம்பி ஆரூரன் அவர்கள் மிகவும் எளிமையாக பாடல் மூலம் எப்படி எம்பெருமான் முருகனை வணங்குவது என்று தெரிவித்தார். நாத ஒலியின் மூலமாக நாம் மனமுருகப் பாடி இறைவனை அடையலாம் என்று பல பாடல்களைப் பாடி பக்தர்களை பக்தி மழையில் நனைய வைத்தார் திருமதி சாரதா நம்பி அவர்கள்.

பன்னிரு திருமுறைகள் 20 மொழிகளில் மொழிபெயர்ப்பு

மறவன் புலவு க. சச்சிதானந்தன் தலைமையில் ஒரு சிறப்பு சொற்பொழிவு நடைதேறியது. சச்சிதானந்தன் ஐயா அவர்கள் நம் பெருமக்களுக்கு மிகவும் எளிய முறையில் பன்னிரு திருமுறைகள் வந்து சேர வேண்டும் என்ற எண்ணத்தில் பாட்டு முதல் குறிப்போ, பாடலில் வரும் எந்த சொல்லையோ www.thevaram.org எனும் இணையதளத்தில் தட்டச்சு செய்தால் உடனே பாடல் அதன் தாளமுடன் வரும் வண்ணம்  பல தொண்டுகளை செய்து வருகிறார்.

நம் பன்னிரு திருமுறைகள் 20 மொழிகளில் வரி வடிகங்களுக்கு ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐயாவின் தலைமையில் சித்தர் நெறியில் முருகப் பெருமான் என்ற தலைப்பில் குருதேவ் மு. மா. செல்வராஜ் அவர்கள் சொற்பொழிவாற்றினார்.

அவர் தம் உரையில் இயற்கை என்பது உடல் மட்டுமல்ல, உள்ளமும், உயிரும் கூட சம்மந்தப்பட்டது.  இவை மூன்றும் பரத்துடன் தொடர்ப்பு கொண்டவை. அந்தப் பரமாக விளங்குபவன்தான் முருகப் பெருமான் என்றும் இயற்கையில் உள்ளதை மக்களுக்கு கூறுவதுதான் சித்த நெறி என்றும் அழகாக மக்களின் மனதில் பதியும் அளவு எளிமையாக தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து புராண இதிகாசங்களில் முருகப் பெருமான் எனும் தலைப்பில் சிவஸ்ரீ கரத்திகேயசிவம் அவர்கள் சொற்பொழிவாற்றினார். அவர் தம் உரையில் துன்பம் வேண்டாம், இன்பம் வேண்டும். இன்பத்தைப் பெற நல்ல அறிவு எனும் ஞானம் வேண்டும். அந்த ஞானத்தை வழங்குவது ஞானக் கடவுளாக திகழும் முருகன் என்றார்.

அதுமட்டும் இன்றி இறைவனுடைய மகிமைகளை பல்வேறு கதைகளின் மூலமாக நமக்கு வழங்கப்படும் புராணத்தையும், நம்முடைய வரலாற்று நூல்களான இதிகாசங்களில் முருகப் பெருமான் நிறைந்திருக்கும் அழகை எடுத்துரைத்து பக்தர்களை பக்திக் கடலில் மூழ்க வைத்தார்.
சிவஸ்ரீ கார்த்திகேய சிவம், தவத்திரு பால யோகி ஸ்வாமிகள், திரு சச்சிதானந்தன், குருதேவ் மு.மா. செல்வராஜ்
சிவஸ்ரீ கார்த்திகேய சிவம், தவத்திரு பால யோகி ஸ்வாமிகள், திரு சச்சிதானந்தன், குருதேவ் மு.மா. செல்வராஜ்
வாழ்வில் நல்ல இலக்கை அடைய
முருக வழிபாடு அவசியம்
முருகன் பக்தி என்ற தலைப்பில் ஆப்ரிக்காவில் இருந்து வருகைப் புரிந்து முருக பக்தர் ஸ்ரீ பேட்ரிக் ஹரிகன் சொற்பொழிவு ஆற்றினார். அவர் தம் உரையில் வயதான அடியார்களுடன் இளைஞர்கள் சேர்ந்து வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்றார். இவ்வாறு ஈடுபடுவதின் மூலம் நல்ல அனுபவம் நமக்குக் கிடைக்கும். நம் வாழ்வில் நல்ல இலக்கை அடைய முடியும் என்றார். அவர் தம் குருநாதரின் வழிகாட்டலில் நல்ல முருக பக்தனாக இருப்பதாகவும் கூறினார்.

முருக வழிபாட்டில் சிறந்தது காவடி டாக்டர் சரஸ்வதி கூறுகிறார்

அனைத்துலக முருக பக்தி மாநாட்டின் இறுதி நாளான நேற்று தென் ஆப்பிகாவில் இருந்து வருகை புரிந்து இருந்த டாக்டர் சரஸ்வதி படையாட்சி தென் ஆப்ரிக்காவில் காவடி பண்பாடு என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

அவர் தம் உரையில் 1816 ஆம் ஆண்டு முதல் சமய வழிபாடு உள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் மலேஷியா தைபூசத்தைப் போல அவர்களும் தைப்பூசத்தை மிக விமர்சையாக கொண்டாடுவதாக தெரிவித்தார்.

அந்நாட்டில் இளைஞர்கள் சமய வழிபாட்டில் மிகவும் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தன் உரையில் கூறினார். அது மட்டுமல்லாமல் முருக வழிபாட்டில் காவடி சிந்து என்றும் காவடி ஏந்தி மனக்குறைகளை முருகனிடம் சொன்னால் அவன் அருள்புரிவான் என்பது அவர்கள் நம்பிக்கை என்றார்.
டாக்டர் நித்தியானந்தம் இரத்தினம்
டாக்டர் நித்தியானந்தம் இரத்தினம் ஐக்கிய ராச்சியம் (லண்டன்) லண்டன் தமிழ் நிலையத்தின் இயக்குனர், 30 ஆண்டுகளாக அந்த தமிழ் நிலையத்தில் தமிழ் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழக படிப்பு வரை மேர்பாச்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் கல்வி நடத்தி வருகிறார். 480 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 18 தமிழ் ஆசிரியர்கள், 34 தமிழ்க் கலை அறிந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ப. முத்துகுமாரசாமி கப்பல் ஓட்டிய தமிழனின் வம்சாவளிப் பேரன். ஒரு சிறந்த எழுத்தாளர். 84 தமிழ் படைப்புகள் படைத்தவர். செந்தமிழ் முருகன் என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை படைத்தார் இந்த மாநாட்டில்.
Bala Murugan
Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp