Copy
தைப்பூசம்: சங்கத் தமிழில் காவடி?--பகுதி 1

தைப்பூசம்: சங்கத் தமிழில் காவடி?

(ஆய்வுக் கட்டுரை: மாதவிப் பந்தல் கே.ஆர்.எஸ்)
பகுதி 1

 
அன்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துக்கள்!
என்னாது, சங்கத் தமிழிலே, அதியமானை எதிர்த்து, ஒளவை காவடி தூக்கினாளா? பார்ப்போமா?:)

அவன், அன்னையிடம், வேல் வாங்கிய நாள் = தைப்பூசம் என்று புராணங்கள் சொல்லும்;
ஆனால், அதனினும் இனிதாய்.....
மென்மையே உருவான நம் வள்ளலார், இறைவனைச் சோதி உருவில் துதித்த நாள் = தைப்பூசம்!

அருட்பெரும் சோதி.... தனிப்பெரும் கருணை!
* திருவரங்கத்திலே, தமிழ் ஓதும் தைத்திருநாள்!
* பழனி மலையிலே, பாத யாத்திரையாய்க் குவியும் காவடிகள்!

தைப்பூசம்-ன்னா என்ன?
என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசியில் விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தையில் பூசம்
* அசுரரை அழித்த நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனியில் உத்திரம்

கதையளவில் இப்படிச் சொல்லப்பட்டாலும்... புராணத்தை நாம் விட்டுத் தள்ளினாலும்...
மனத்துக்கு இனிய இசை = காவடிச் சிந்தின் இசை!
அந்த இசை துள்ளும் திருநாளே = தைப்பூசம்!

சடங்கு சாத்திரம் அறியாத எளிய மக்கள்; அவர்களுக்கும் முருகனுக்கும் உள்ள நேரடித் தொடர்பு = தைப்பூசம்!
தைப்பூசம் -ன்னாலே, நம் மனசுக்குள் ஓடி வருவது = பழனிப் பாத யாத்திரையும், காவடி ஆட்டமும் தானே!

ஒவ்வோர் ஆண்டும், தைப் பூசத்தில், பழனிப் பாத யாத்திரை;
இது தெக்கத்தி மக்களுக்கே உண்டான வழக்கம்; குறிப்பாக் காரைக்குடி/ தேவகோட்டை (எ) செட்டிநாட்டுப் பகுதி மக்கள்!
100 miles (160 km) நடந்து..., நம்பியை நம்பி வரும் உள்ளம்; நடையாய் நடந்து வரும் உள்ளம்!

பின்னாளில், இந்த எளிய பாத யாத்திரை, இதர ஆலயங்களுக்கும் பரவி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பினாங்கு எனக் கோலாகலமாய்ப் பரவி விட்டது!


சரி... காவடிச் சிந்து -ன்னா என்னா-ன்னு பார்க்கும் முன்...
"காவடி" -ன்னா என்னா -ன்னு பார்ப்போமா?:)

அரும்பெறல் மரபின், பெரும்பெயர் முருக!
அந்த மரபின் தனித்த அடையாளம் = காவடி!


* மொட்டை போடுதல் திருப்பதியிலும் உண்டு; சமணக் குடும்பங்களில் கூட உண்டு;
* அலகு குத்தல் அம்மன் கோயில்களில் உண்டு; வெறியாடலும் உண்டு!
* ஆனா காவடி??? வேற எங்காச்சும் இருக்கா?

நீங்களே யோசிச்சிப் பாருங்க! தமிழ்க் குடியின் தொன்மவியல்;
இந்த நாட்டார் வழக்கம் = முருகனோடு மட்டும் உறவாடுவது ஏனோ?

இடும்பன் (எ) அசுரன், அகஸ்திய மகரிஷியின் இரண்டு மலைகளைத் தூக்கி வந்தான்;
பாதி வழியில் கீழே வச்சிட்டுத் தூங்கும் போது...
அது மேல மாம்பழக் கோவ முருகன் (எ) சுப்பிரமணியன், கோவமா ஏறி நின்னுக்கிட்டான்;

தூங்கி எழுந்தவனோ, மறுபடியும் தூக்க முடியாமல், முருகனிடம் சண்டை போட, ஆளு "க்ளோஸ்";
அப்போ, தன்னைப் போலவே, பக்தர்களும் காவடி தூக்கிட்டு வரணும்-ன்னு வேண்டிக்கிட்டான்; டொட்ட டொய்ங்க்... End of Puranam:)


இதனால் தான் முருகனுக்குக் காவடியா?
எத்தனை சுலபமா, பூர்வகுடி மக்களின் வாழ்வியல் - தொன்மவியல் - முருகவியல் அடிபட்டுப் போயிருச்சே!:(
"புராணம்" -ன்னு கதையைக் கட்டினா, தமிழ்த் தொன்மம் அழிஞ்சீரும்!:(

போதாக் குறைக்கு, ஒளவை (எ) பெருமை மிக்க சங்கத் தமிழ்ப் பெண்;
ஆனா அவ மேலயும் "புராணக்" கதை!
மொத்தம் 6 ஒளவையார்கள் தமிழ் இலக்கியத்தில்;

முதலாம் ஒளவை அதியமான் காலம் (3rd BCE - 2nd CE); அவ எப்படிக் கைலாசத்தில், "பழம் நீ அப்பா" பாட முடியும்?
அப்படீன்னா, இயேசு பிறந்து, கிபி 2 க்குப் பிறகே சிறுபிள்ளை முருகன், பெரியவனா வளர்ந்து, சூரனை அழிச்சான் -ன்னு ஆயிருமே?:))

புராணத்துக்கு அம்புட்டு Continuity போதாதுங்க:)
தப்பில்லை! புராணம், புராணமா இருக்கட்டும் (Mythology)! ஆனா, அதை, வாழும் தமிழ்ச் சான்றோர் மேல், இட்டுக் கட்டக் கூடாது;
நக்கீரர், ஒளவை போன்ற சங்கத் தமிழ்ப் பெருமக்களின் மாண்பு; அதை நாம் மதித்து நடக்கணும்! "மனசில்" கொள்வோம்;

அப்போ, "காவடி" -ன்னா என்னய்யா?
அது எப்படி, தமிழ்த் தொன்மமான முருகனுக்கே உரியதாச்சு? பார்க்கலாமா?


புறநானூறில் காவடி?

தமிழ் அகராதியில் சும்மா போயி பொருள் பாருங்க;
காவுதல் = தூக்குதல்;
காவு + தடி;
காவு + அடி
= காவடி!
அதாச்சும், தூக்கும் தண்டு; காவும் தடி = காவடி!
மலையில், பாரம் சுமக்க, பூர்வ குடி மக்களுக்கு இது ஓர் எளிய கருவி (Simple Machine)

அறிவியலில் (Physics) படிச்சிருப்பீங்க, Fulcrum, Lever ன்னு எல்லாம் நெட்டுரு போட்ட ஞாபகம் இருக்கா?:)
A lever is a beam connected to a hinge, called a fulcrum;
அது Human Fulcrum ஆகும் போது, அதே Lever காவடி ஆகின்றது! இரு புறமும் நிறை (எடை) சமன் செய்தல் = Balancing!

Mechanical Advantage of a lever (MA) = Balance of Torque, about the fulcrum;
MA = m1/m2 = a2/a1
பயந்துறாதீக; ஒங்கள மறுபடியும் எட்டாம் வகுப்புக்குக் கூட்டிப் போவ மாட்டேன்:)

இப்படி எடையைச் சமன் செய்யும், பூர்வ குடிகளின் கருவியே = காவடி!

(குறிஞ்சி) மலை வாழ் மக்கள், கையால் சுமந்து செல்வது கடினம்; அதான் எடையைப் பரவி, பின்பு சுமந்து செல்லுதல்!
(மலைப் பிரதேசங்களில், ரெண்டு ஆட்களையே இப்படி உட்கார வச்சி, எளிதாகச் சுமந்து விடலாம், காவடியின் உதவியால்)

சரி புரிஞ்சுது; ஆனா காவடி = ஏன் முருகனுக்கு மட்டுமே ஆனது?
* ஏன்னா, முருகன்= குறிஞ்சிக் கடவுள் = மலையும் மலை சார்ந்த இடமும்!
* திருமால்= முல்லைக் கடவுள் = காடும் காடு சார்ந்த இடமும்!

மலை வெளியில், இம்புட்டு நீளமாத் தூக்கிச் செல்லலாம்; காட்டிலே தூக்கினா, அந்த நீளத்துக்கு வழியெல்லாம் முட்டும்:)
(#jokeonly : காதலன் முருகன் முட்ட மாட்டான்; அப்பா திருமால் முட்டுவாரு:))

மலைவெளிச் செங்குத்து; நடந்தாலே மூச்சு வாங்கும்; அதில் பாரம் சுமக்க, இப்படியொரு எளிய வழி!
அந்த மரபே, அந்தப் பூர்வகுடி மக்களின் கடவுளான, சேயோன் (எ) முருகனுக்கும் ஆனது;
இன்னொரு பூர்வகுடித் தமிழ்க் கடவுளான மாயோன் (எ) திருமாலுக்கோ, கொற்றவைக்கோ, காவடி ஆகவில்லை! "மலைத்" தெய்வத்துக்கு மட்டுமே ஆனது!

காவடியின் பல்வேறு பெயர்கள், தமிழ் இலக்கியத்தில்!
* காமரம்,
* காத் தண்டு, காவடித் தண்டு,
* காவணப் பத்தி, காவுப் பொருட்டு

புறநானூற்றிலும் காவடி வருகிறது; தூக்குறது யாரு? = ஒளவை-யாரு!:)


அதியமானின் நாடு = தகடூர்;
மலை நாடு; அதனால், ஒளவையாரும் காவடி எடுக்கின்றார்!
 
ஒளவையைத் தன் நாட்டிலேயே இன்னும் கொஞ்சம் நாள் வச்சிக்கடணும்-ன்னு அதியனுக்கு ஆசை; அதனால் அவருக்கு மட்டும் இன்னும் பரிசில் குடுக்கலை:)

இது தெரியாமல், ஒளவைக்கோ கோவம்; "போடா, உன் பரிசில் வேணாம்; நான் கெளம்புறேன்" -ன்னு மூட்டை கட்டுறாரு, தன் Luggageஐ, ஒரு காவடியில்:)

வாயி லோயே வாயி லோயே
பரிசிலர்க்(கு) அடையா வாயி லோயே
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!
(புறநானூறு 206;
வாயில் நீட்டித்த அதியமான் நெடுமான் அஞ்சியை, ஒளவை பாடியது)

* எத்திசை செலினும் அத்திசைச் சோறே = நான் எங்கிட்டு போனாலும் சாப்பாடு கெடைக்கும்டா; ஒன்னைய நம்பி இல்லை!
* காவினம் கலனே = என் கலன்களை எல்லாம் காவுகிறேன் (தூக்குகிறேன்);
காவு தடியில் (காவடியில்) இதோ தூக்குறேன்; See u; Tata; Bye Bye:))

என்ன வீறாப்பு பாருங்க செந்தமிழ்க் கிழவிக்கு:)
* இன்னிக்கி "காவடி தூக்குறான்" -ன்னா பொருளே மாறிருச்சி:( டில்லிக்குக் காவடி எடுக்கும் அமைச்சர் -ன்னா, குனிந்து குனிந்து கெஞ்சுதல்!
* ஆனா, அன்னிக்கி பாருங்க... "காவடி எடுக்கறேன்" -ன்னா, கெளம்புறேன், ஒன்னை நம்பி இல்ல -என்னும் தமிழ் மான உணர்ச்சி!

ஒளவை மட்டுமா காவடி எடுக்குறா?
பின்னாளில், கம்பனும் காவடி எடுக்குறான்!

அரத்த நோக்கினர். அல் திரள் மேனியர்.
பரித்த காவினர். பப்பரர் ஏகினார் -
திருத்து கூடத்தைத் திண் கணையத்தொடு
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே
(பால காண்டம் - எழுச்சிப் படலம் 768;
தயரதன், திருமணத்துக்கு வரும் வழியில் கண்ட, மலைக் காட்சிகள்)

பரித்த காவினர் = காவடித் தண்டைச் சுமந்து சென்றார்கள்;
யார்? = பப்பரர் என்னும் மலைவாழ் மக்கள்;
அரத்த நோக்கினர் = சிவந்த கண்கள்;
அல் திரள் மேனியர் = கருத்த உடம்பு; காவடியில் பாரம் தூக்கிக்கிட்டு மலையேறுகின்றனர்;

இது தாங்க, புராணம் கலவாத, தமிழ்க் காவடியின் கதை!:)
வாங்க, நாம காவடிச் சிந்துக்குப் போவோம்!
அங்கே தானே மனசுக்குப் பிடிச்ச இசை இருக்கு?:)
Thaippusam Theppam -- Kapaleeswarar Sivan Kovil, Mylapore
Thai Pusam float festival at Kapaleeswarar Sivan Kovil, Mylapore
friend on Facebook | forward to a friend 
Copyright © 2013 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp